புதுடெல்லி, ஏப்ரல் 1 – ஏமனில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சானாவில் சிக்கித் தவித்த 349 இந்தியர்களை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து 6-வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
இதனால் எஞ்சியுள்ள ஏமனும் அழிவுக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில் தலைநகர் சானாவில் சிக்கித் தவிக்கும் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக போர்க் கப்பல்களும், விமானங்களும் அந்நாட்டு அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று மாலை இந்திய கடற்படையினர் 349 இந்தியர்களை சானாவில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் அருகே உள்ள சிறிய நாடான டிஜ்ஜிபோட்டிக்கு கப்பலில் அழைத்து செல்லப்படும் அவர்களை அங்கிருந்து விமானப்படை மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.