ஏப்ரல் 2 – உதயநிதி, சந்தானம் கூட்டணியாச்சே… சரி …படம் சூப்பரா இல்லாட்டாலும்… ஓரளவுக்கு சுமாராவாவது இருக்கும் என்ற நம்பிக்கையோடு தியேட்டருக்குப் போனால், ஸ்கூல் எப்படா விடுவாங்க வீட்டுக்குப் போலாம் என்ற மனநிலையோடு இருக்கும் குழந்தைகள் போல, படம் முடியும் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
வழக்கம் போல உதயநிதி மூட்டை முடிச்சோட நண்பன் சந்தானத்தை தேடி வருவது, நயந்தாராவை கண்டு காதலில் விழுவது,நண்பன் காதலுக்கு சந்தானம் உதவுவது போன்ற பார்த்துப் பழகிய ‘நண்பேன்டா’ காட்சிகளை பொறுத்துக் கொண்டாலும் கூட, கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் பெண் ரவுடி, தாதா கோஷ்டிகளுக்குள் சண்டை, ஃபிளாஷ்பேக் போன்ற கோமாளித்தனங்களை தான் ரசிக்க முடியவில்லை.
படத்தில் நயன்தாரா இருப்பது சற்று ஆறுதல்அளிக்கின்றது. ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையும், பாடல்களும் புத்துணர்ச்சி அளிக்கின்றன. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அழகு.
கதை என்ன?
தஞ்சாவூரில் வசிக்கும் உதயநிதி, திருச்சியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் நண்பன் சந்தானத்தை தேடி மாதம்தோறும் சம்பளத் தேதி அன்று வந்துவிடுவார். சந்தானம் வாங்கும் சம்பளம் அனைத்தையும் அன்று செலவழித்தவுடன் திரும்ப ஊருக்குப் போய்விடுவார்.
அப்படி ஒருமுறை வரும்போது, நயந்தாராவை தற்செயலாக சந்திக்கிறார். காதலில் விழுகிறார். நயன்தாரா பின்னாலேயே அலைந்து அவரை காதலிக்கவும் வைக்கிறார்.
அப்போது நயன்தாரா தனது கடந்த காலம் குறித்த ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். அதனால் உதயநிதிக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனக்கசப்பு வருகின்றது. கிளைமாக்சில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.
(‘நண்பேன்டா’ படத்தின் கதையை சொல்லச் சொன்னா ஏன் உதயநிதி நடிச்ச பழைய படங்களோட கதையை சொல்றீங்கன்னு? நீங்க கேட்கிறது புரியுது… சத்தியமா இது ‘நண்பேன்டா’ கதை தான்)
ரசித்தவை
சந்தானம் வரும் நகைச்சுவை காட்சிகள் முதல் பாதிவரை ரசிக்க வைக்கின்றன.தன்னை தேடி வரும் உதயநிதியை விரட்ட சந்தானம் படும் பாடு கலகலப்பு.இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நகைச்சுவை பண்ணுகின்றார். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.
“இவர் தான் ஸ்கார்பியோ சங்கரு….சமஞ்ச பொண்ணு பச்சை ஓலைக்குள்ள இருக்குற மாதிரி, ஸ்கார்ப்பியோ சங்கரும் அவர் காருக்குள்ளேயே தான் எல்லாமே செய்வாரு” என்று ராஜேந்திரனை அறிமுகப்படுத்துவது, “டேய் நமக்கு ஜெயிலுக்கு போறதுக்கு அதிர்ஷ்டமே இல்லை டா..” என்று கூறும் உதயநிதியிடம், “சரி.. வா… அதிர்ஷ்ட கல்லு மோதிரம் வாங்கி போட்டுகிட்டாவது ஜெயிலுக்கு போவோம்” என்று கலாய்ப்பது என ஓரளவு படம் பார்க்கும் ரசிகர்களை சந்தானம் திருப்தி படுத்துகின்றார்.
நயன்தாரா இயல்பான நடிப்பு. தனது கதாப்பாத்திரத்தை சரியாக செய்திருக்கின்றார். படம் முழுவதும் அவர் அணிந்து வரும் உடைகள் அழகு.
திடீரென்று ஒரு ஃபிளாஷ்பேக்கில் சந்தானத்தின் ஜோடியாக அழகான ஒரு நடிகை வந்து போகின்றார். அந்த காந்தக் கண்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கின்றதே என்று தோன்ற, சற்று நேரத்தில் ஞாபகம் வந்து விட்டது. அட… நம்ம ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின். சற்று உடல் பெருத்துவிட்டாலும், இன்னும் அதே அழகு தான்.
ஷெரின் அறிமுகத்திற்கு ஹாரிஷ் கொடுத்திருக்காரே ஒரு பின்னணி இசை. அடடா… என்று சொல்லும் அளவிற்கு அற்புதம்.
ஏமாற்றம்
உதயநிதி, சந்தானம் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா மனோகர், மனோபாலா, பட்டிமன்றம் புகழ் ராஜா என அத்தனை காமெடி பட்டாளம் இருந்தும் படத்தில் காமெடிக்கு அவ்வளவு பஞ்சம்.
படத்தின் தொடக்கத்தில் சிறைச்சாலையில் இருந்து உதயநிதி தப்பிப்பதாக அவ்வளவு பெரிய பில்டப்பெல்லாம் கொடுத்து கடைசியில் சிறுபிள்ளைத்தனமாக ஒரு காரணத்தை வைத்தது.
ஒரு சண்டைக்காட்சியில் நயன்தாராவை தூக்கி, அவரை வைத்தே எதிரிகளை அடித்து சமாளிக்கிறார் உதயநிதி. (அண்ணாமலை பட ஐடியா… உதயநிதி இத நீங்க ஹன்சிகாவ வச்சு பண்ணியிருந்தாலும் சின்ன குஷ்பு என்று எடுத்துக்கொள்ளலாம்).
அதுமட்டுமா… ‘உயிரே’ படத்தில் மனிஷா கொய்ராலாவை பார்த்து அவர் தோழி சொல்வது போல், ஒரு காட்சியில் நயன்தாராவைப் பார்த்து அவரது தோழி, “ஏன்டி இவ்வளவு கோபப்படுற? நாம இங்க எதுக்காக வந்திருக்கோம்?” என்று கேட்டு ஏதோ ஒரு பெரிய கதை திருப்பம் இருப்பது போல் கொளுத்திப் போடுகிறார். ஆனால் அந்த காட்சிக்கான ஃபிளாஷ்பேக்… அடபோங்கப்பா…
ஜவ்வாக படம் இழுத்து இப்ப முடியுமா? அப்ப முடியுமா? என்று காத்திருக்கும் போது, அங்க ஒரு பாட்டு வேற…
இப்படியாக, ‘நண்பேன்டா’ பட அனுபவம் இருந்தது…
வித்தியாசமான திரைக்கதை, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, அசர வைக்கும் ஒளிப்பதிவு, இப்படியாக பல கற்பனைகளோடு போகாமல், எப்படி இருந்தாலும் எனக்கு “ஓகே… ஒகே” என்று நீங்கள் எடுத்துக் கொள்வதாக இருந்தால் தாராளமாக ‘நண்பேன்டா’வை ரசிக்கலாம்.
– ஃபீனிக்ஸ்தாசன்