கோலாலம்பூர், ஏப்ரல் 2 – கார்த்தி – ராஜ்கிரண் – இலட்சுமி மேனன் கூட்டணி என்றபோதே இரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க –
போதாக் குறைக்கு, ஜாதிப் பிரச்சனையைப் பேசும் படம், அதனால் தடை செய்ய வேண்டும் என ஒரு சில தமிழக குழுக்கள் போராட்டத்தில் இறங்க –
கொம்பனுக்கு ஏகப்பட்ட விளம்பரம்தான்! இருந்தாலும் ஏமாற்றவில்லை இயக்குநர்.
படத்தைப் பார்த்தால், ஓர் இடத்தில் கூட ஜாதிப் பெயர் இல்லை. ஒரு காட்சியில் கூட ஜாதிப் பிரச்சனை பேசும் வசனங்களோ, கதை அமைப்போ இல்லை. பிரச்சனைக்குப் பின்னர் இயக்குநர் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்ட மாதிரியும் தெரியவில்லை.
ஒரு சிலர் எழுப்பிய பிரச்சனையால் படத்திற்கு கூடுதலான விளம்பரம்தான் கிடைத்திருக்கிறது.
படம் முழுக்க மைய இழையாக இயக்குநர் இழைத்துப் பின்னியிருப்பது, மாமனார்- மருமகன் இடையிலான உறவு முறையையும், அவர்களுக்கு இடையில் சில சமயங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும்தான்.
ஏற்கனவே பல படங்களில் மாமனார் – மருமகன் இடையிலான காட்சிகள் இடையிடையே வந்திருந்தாலும், அந்த அம்சத்தை மையமாக வைத்து முழுப் படத்தையும் வித்தியாசமாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் முத்தையா பாராட்டப்பட வேண்டியவர்.
ஏற்கனவே, சசிகுமாரை வைத்து “குட்டிப்புலி” என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர் இந்த முத்தையா.
கதைக் களம்
படத்தின் ஆரம்பக் காட்சிகள் அப்படியே பருத்தி வீரனை நினைவுபடுத்துகின்றன. கார்த்திக்கும் அதே போன்ற மீசை, தோற்றத்தில் வருகின்றார். வசன உச்சரிப்புகளிலும் அதே பாவனை.
இருந்தாலும், முதல் கால்வாசிப் படத்தில் படத்தின் பல்வேறு கதாப் பாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, கார்த்தியின் குணாதிசயக் காட்சிகளையும் காட்டிவிட்டு, பின்னர் கல்யாணக் காட்சிகளுக்கும், மாமனார், மருமகன் இடையிலான உறவின் கசப்புகளையும், சுவாரசியங்களையும் காட்டத் தாவி விடுகின்றார் இயக்குநர்.
படம் முழுக்க சிறு சிறு காட்சிகளாக அமைத்திருப்பதும், முடிவடையும் ஒரு காட்சியையும், தொடங்கும் அடுத்த காட்சியையும் அழகாக நகைச்சுவையுடன் தொடர்பு படுத்தி இணைத்துக் கொண்டே போவதிலும் இயக்குநரின் ரசனையும், சிந்தனை உழைப்பும் வெளிப்படுகின்றது.
அடிதடி எனச் சுற்றிக் கொண்டிருக்கும் கொம்பனாக வரும் கார்த்தி, பழனி என்ற இலட்சுமி மேனனைப் பார்த்துக் காதலில் விழுகின்றார்.
இலட்சுமி மேனனோ, தந்தையோடு வாழ்கின்றார். “என் அப்பா என்கூடத்தான் இருப்பார். ஒத்துக் கொள்பவரைத்தான் திருமணம் செய்வேன்” என இலட்சுமி மேனன் விதிக்கும் கட்டுப்பாட்டுக்கு கார்த்தியும் அவரது அம்மா கோவை சரளாவும் ஒப்புக் கொள்ள, அவருக்கும் கார்த்திக்கும் கல்யாணம் நடைபெறுகின்றது.
ஒரே வீட்டில் தங்கும் மாமனார் ராஜ் கிரணுக்கும், மருமகன் கார்த்திக்கும் இடையிடையே ஏற்படும் உரசல்கள் – அதனால் விளையும் சண்டை சச்சரவுகள் என திரைக்கதை போகின்றது.
பின்னர் மாமனாரின் நல்ல குணத்தையும், தன்மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் புரிந்து கொள்ளும் கார்த்தி, வில்லன்களால் மாமனாருக்கு ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க களத்தில் இறங்க, வழக்கமான வெட்டு, குத்தல் என படம் தொடர்கின்றது.
இருப்பினும், வித்தியாசமான, இயல்பான, நகைச்சுவை ததும்பும் சம்பவச் செருகல்கள், சில புதிய களங்கள், உச்சகட்ட இறுதிக் காட்சியில் ராஜ்கிரணனின் சாமியாடும் பின்னணி என இறுதி வரை படத்தை சுவாரசியம் குறையாமல், கலகலப்பாகக் கொண்டு செல்கின்றார் இயக்குநர்.
யாரோ ஒருவர் கொலை செய்யப்படப் போகின்றார் என்பதுபோல எதிர்பார்க்க வைத்து, யாரையும் சோகத்துக்காக “போட்டுத் தள்ளாமல்” சுபமாக முடித்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
படத்தின் பலம்
இயக்குநரின் கதை சொல்லும் திறனில், அவருக்கு நன்கு ஒத்துழைத்திருப்பது படத் தொகுப்பும், வேல்ராஜின் ஒளிப்பதிவும்.
இறுதிக் காட்சிகளில் இரவு நேரத்தில் தீப்பந்தம் தூக்கிக்கொண்டு சாமியாடிக் கொண்டே ஓடும் ராஜ்கிரணோடு வேல்ராஜின் காமெராவும் ஓடியிருக்கின்றது.
கிராமத்துத் தெருக்களின் இயல்பாக வாழ்க்கையையும், மனிதர்களின் உரையாடல்களையும், அவர்களின் பரிமாற்றங்களையும் அசலாகப் பதிவு செய்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஒரு காட்சியில் நடிக்கவும் செய்திருக்கின்றார்.
படத்திற்கு பலம் சேர்ப்பதும், அடிக்கடி ரசிகர்களின் கைதட்டலைப் பெறுவதும் வசனங்கள்தான். அவ்வளவு கூர்மை. அவ்வளவு இயல்பு – சில இடங்களில் நெகிழ்ச்சி. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக ராஜ்கிரணுக்கும், கார்த்திக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், படம் பார்க்கும் மாமனார்களுக்கு மருமகன்களையும், மருமகன்களுக்கு மாமனாரையும் ஞாபகப்படுத்தியிருக்கும்.
சந்தானம், சூரி ரக காமெடிகளுக்கு மட்டுமே கைதட்டி மகிழ்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்காக மட்டுமே கைதட்டி, ஆரவாரிப்பது, இயக்குநரின் எழுத்து சாமர்த்தியத்திற்கு எடுத்துக்காட்டு.
கார்த்தியும் அவரது அம்மாவாக வரும் கோவை சரளாவும் சண்டை போட்டுக்கொள்வதும், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் அவ்வளவு இயல்பு. ஏதோ வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
மாமனார் – மருமகன் இடையிலான வசனங்களிலும் அவ்வளவு கூர்மை. யதார்த்தம்.
வில்லன்கள் முகத்திலேயே வில்லத்தனமாக கவிதைகளை எழுதி வழங்குகின்றார்கள். பொருத்தமான தேர்வுகள்.
காட்சிகளை சிறிய சிறிய காட்சிகளாக அமைத்திருப்பதால், உடனுக்குடன் மாறும் காட்சிகளால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.
கிராமத்துக் காட்சிகளுக்கேற்ற பரபரப்பான பின்னணி இசையை, கிராமத்து வாத்தியங்களோடு வழங்கி அசத்தியிருக்கின்றார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை.
சிறப்பான நடிப்பு
படத்தின் மிகப் பெரிய பலம் ஒவ்வொருவரின் நடிப்பு. கார்த்தி பல இடங்களில் தனது ஹீரோயிசத்தைக் காட்டினாலும், கதையோடு பொருந்திப் போகின்றார். கதையோடு இணைந்து வாழ்ந்திருக்கின்றார். பருத்தி வீரனின் மறு விஜயம் என்றாலும், தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றார்.
ராஜ்கிரணைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மகளுக்காக உருகும் காட்சிகளிலும், பின்னர் மருமகனுக்காக கவலைப்படும் காட்சிகளிலும், தனது ஸ்டைலில் வேட்டியை மடித்துக் கொண்டு நடுத்தெருவில் சண்டை போடும் காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியிருக்கின்றார்.
தம்பி ராமையாவும், கோவை சரளாவும், நகைச்சுவையில் கைகொடுக்கிறார்கள்.
இலட்சுமி மேனனும் பாந்தமான, நடிப்பை வழங்கியிருக்கின்றார். தன் மேல் கைவைக்க முனையும் வில்லனிடம் “தொடுறா பார்க்கலாம்” என சீறும் காட்சியில் விசிலையும், கைதட்டலையும் ஒரு சேரப் பெறுகின்றார். கவர்ச்சி காட்டாமலேயே, கிராமத்துப் பெண்ணின் வேடத்தில் கவரும் இலட்சுமி மேனன், ஒரு பாடலில் மட்டும், கார்த்தியோடு பின்னிப் பிணைந்திருக்கின்றார்.
படத்தின் பலவீனம், குறைகள் என்றால், நீளமான சண்டைக் காட்சிகள்தான். மற்றொரு குழப்பம் வில்லன்களுக்கிடையில் ஏன் திடீரென வெட்டு குத்து, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது இறுதி வரை விளக்கமாக காட்டப்படாமலேயே படத்தை முடித்திருப்பது.
இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், கொம்பன் – தாராளமாக நம்பிப் பார்க்க வேண்டிய படம்.
அதிலும் மாமனார், மருமகன் உறவின் பெருமையை வித்தியாசமான கோணத்தில் அணுகி உணர்த்திய விதத்தில் தனித்து நிற்கின்றான் கொம்பன்!
-இரா.முத்தரசன்