சென்னை, ஏப்ரல் 3 – கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். படம் துவங்கியபோது, அழகாக தயாராகி வந்த படம், வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்தது.
இப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் கொம்பன் படம் தடைகளைத் தாண்டி நேற்று வெளியானது.
படத்தில் எந்த இடத்திலும் ஜாதி பெயரோ, அல்லது இரு ஜாதிக்கு இடையிலான பிரச்சனையோ என்று எதையுமே குறிப்பிடவில்லை. மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையிலான விஷயத்தை மிகவும் அழகாக இயக்குனர் காட்டியிருக்கிறார்.
இந்நிலையில் கொம்பன் பிரச்சனையில் உதயநிதியின் தூண்டுதல் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. தான் நடித்த ‘நண்பேன்டா’ படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘கொம்பன்’ படத்திற்கு மறைமுக தொந்தரவு தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி இதனை மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘கொம்பன்’ படத்தின் வெளியீட்டிற்கு நான் தடையாக இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் விளம்பரத்துக்காகத்தான் என் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்”.
“நண்பேன்டா படத்தின் வெளியீடு தேதியை ஒரு மாத்திற்கு முன்பே அறிவித்துவிட்டேன். ‘கொம்பன்’ பட வெளியீடு தேதி அறிவிக்கும் முன்பே எனது படம் 275 திரையரங்குகளில் திரையிட ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது”.
“கொம்பன் படம் வந்தாலும், எத்தனை திரையரங்குககளில் திரையிட்டாலும் அதனால் என் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படியிருக்கையில் இதில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்க விஷயம் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.