சென்னை : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தருணத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக தமிழ் நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் (ஜனவரி 11) தொடங்கி நடைபெறுகிறது ‘அயலகத் தமிழர் தினம் 2024’.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை தமிழ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உயிராக நேசித்த ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லை கருப்பொருளாக கொண்டு நடைபெறும் இந்த 2 நாள் நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொழில்முனைவோர்கள் என அயலகத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழக அரசு என்றும் திகழும் என தாய்த் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள அயலகத் தமிழர்களிடையே உரையாற்றினேன். அயலகத் தமிழர் தினம் – 2024 சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தேன்” என உதயநிதி தன் முகநூலில் பதிவிட்டார்.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வைத்தோம். அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் பயன்பாடுகளை கேட்டறிந்தோம்.