Home நாடு ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் 2-வது கறுப்பு பெட்டியும் கிடைத்தது!

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் 2-வது கறுப்பு பெட்டியும் கிடைத்தது!

475
0
SHARE
Ad

FR_box_2மார்செய்ல், ஏப்ரல் 2 – பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி 9 நாட்கள் தேடுதலுக்கு பிறகு இன்று கிடைத்துள்ளது.

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ‘4யூ 9525’ என்ற பயணிகள் விமானம் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

#TamilSchoolmychoice

அதில் பயணம் செய்த 150 பேரும் இறந்தனர். பலியானவர்களில் 67 பேர் ஜெர்மானியர்கள் என்றும், 45 பேர் ஸ்பானியர்கள் என்றும் தெரியவந்தது.
கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

விபத்து நடந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர், சம்பவ இடத்தை நெருங்கி விபத்து நடந்த அன்றே, விமானத்தின் முதல் கறுப்பு பெட்டியை மீட்டு உடனடியாக ஆய்வு செய்தது.

அதில் உள்ள ரெக்கார்டரை ஆய்வு செய்த போது, விமானி வெளியே சென்ற நேரத்தில் துணை விமானியான லுபிட்ஸ் விமான கட்டுப்பாட்டு அறையின் கதவை மூடிவிட்டு, வேண்டுமென்றே விமானத்தை மோதியதும், இந்த கொடூரத்தை பயணிகள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் 9 நாளாக ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடந்த தொடர் தேடுதலின் விளைவாக விமானத்தின் 2-வது கறுப்பு பெட்டியும் இன்று கிடைத்துள்ளது. இதில்தான் முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் பதிவாகியிருக்கும்.

இதன் மூலமாக விமானம் விபத்துக்குள்ளான கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என ஜெர்மன் காவலர்கள் தெரிவித்தனர்.