Home உலகம் அணுசக்தி விவகாரம்: ஈரானுடன் உலக நாடுகள் ஒப்பந்தம்!

அணுசக்தி விவகாரம்: ஈரானுடன் உலக நாடுகள் ஒப்பந்தம்!

527
0
SHARE
Ad

iran-mmap-mdலுசானே, ஏப்ரல் 4 – தனது நாட்டின் அணுசக்தி திட்டங்களை குறைத்துக் கொள்ள உலக நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொண்டது. தனது நாட்டின் அணுசக்தி திட்டங்களை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக ஈரான் ரகசியமாக பயன்படுத்தி வருகிறது என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

ஆனால் மின்சார தேவைக்காக மட்டுமே அணுசக்தியை பயன்படுத்தி வருவதாக ஈரான் மறுத்தது. எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் இதனை ஏற்கவில்லை. ரஷியாவும், சீனாவும் இதில் நடுநிலை வகித்தன.

இப்பிரச்சினையில் அனைத்துலக அணுசக்தி முகமை தலையிட்டபோதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பொருளாதார தடை விதித்தன.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்களை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்த நடவடிக்கையின் காரணமாக பேச்சுவார்த்தையில் அண்மைக் காலமாக நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டது.

இந்தநிலையில் தனது அணுசக்தி திட்டங்களை குறைத்து கொள்வது தொடர்பாக ஈரானுக்கும், 6 உலக நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானே நகரில் இறுதிக்கட்ட பேச்சு நடந்தது.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் இரு தரப்புக்கும் நேற்று முன்தினம் இரவு உடன்பாடு ஏற்பட்டது.

அப்போது தனது நாட்டின் அத்தனை அணுசக்தி திட்டங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்குரிய ஒப்பந்தத்தை 6 உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்டது. மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடாது என்றும் ஈரான் ஒப்புக்கொண்டது.

இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை தலைவர் பெடரிகா மொஹிரினி, ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜாவீத் ஷரீப் ஆகியோர் கூட்டாக முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Iran-After-12-Years-A-Breakthrough-in-Nuclearஇந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக நீடித்து வந்த முட்டுக்கட்டைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மை உருவாகும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

ஈரான், தனது அணுசக்தி திட்டங்களை குறைக்க ஒப்புக்கொண்டு உள்ளதற்கு பிரதிபலனாக அதன்மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விதித்திருந்த பொருளாதார தடையை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டு உள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி இரு தரப்பினர் இடையேயும் இறுதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி குறைந்த அளவில் செறிவூட்டிய யுரேனியம் தாதுவின் அளவை அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 98 சதவீதம் வரை ஈரான் குறைப்பது, தனது அணு உலைகளின் எண்ணிக்கையை படிப்படியாக ஈரான் குறைத்துக் கொள்வது,

மேலும் ஈரான் தனது நவீன அணுசக்தி எந்திரங்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்திட்டங்கள் தவிர வேறு எதற்காகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த உடன்பாடு பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ‘விரிவான கூட்டு நடவடிக்கை திட்டமான இது அருமையான ஒன்று’ என வரவேற்றார்.