கோலாலம்பூர், ஏப்ரல் 4 – முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பதிலளிக்க வேண்டுமென இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் (படம்) வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் துன் மகாதீர் தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், மகாதீரின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்ப்பது சரியான வழியல்ல என்றார்.
“மகாதீரின் கேள்விகளைப் புறக்கணித்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனக் கருதுகிறேன். சில விவகாரங்களுக்குப் பதிலளித்துவிட்டதாக நாம் கருதினாலும் கூட, அவற்றுக்கு மேலும் விரிவாக பதிலளிக்க வேண்டியது அவசியம்,” என்றார் கைரி.
பிரதமர் நஜிப்புக்கான தங்களின் வலுவான ஆதரவு நீடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், நஜிப்பின் தலைமையில் தேசிய முன்னணி அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியடையும் என்ற மகாதீரின் கருத்தை தம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்றார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நஜிப் எந்தவித பதிலும் அளிக்காததால், அனைத்து இன மக்களும் இனி நஜிப்பை நம்பமாட்டார்கள் என துன் மகாதீர் தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மங்கோலிய அழகி அல்தான்துயா, 1 மலேசியா பெர்ஹாட் சர்ச்சை மற்றும் சொகுசு ஜெட் விமானம் வாங்கியது தொடர்பிலும் மகாதீர் சில குற்றச்சாட்டுகளை தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.