சைபர் ஜெயா, ஏப்ரல் 4 – பிரதமர் நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும் என துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். சைபர் ஜெயாவில் ‘இளையர் அறிய வேண்டியது என்ன?’ என்ற தலைப்பிலான தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்னோ காப்பாற்றப்பட வேண்டுமானால் அதன் தலைவர் மாற்றப்பட வேண்டும் என்றார்.
மேலும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியை விட நஜிப்பின் செயல்பாடு மோசமாக உள்ளது என்றார் அவர்.
“அம்னோ காப்பாற்றப்பட வேண்டுமானால் அதன் தலைவர் மாற்றப்பட வேண்டும். நஜிப்புக்குப் பிறகு யாரை தலைவராக்குவது என்பதை அம்னோ தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் நஜிப் நிச்சயமாக பதவி விலக வேண்டும்,” என்றார் மகாதீர்.
இதுவரை தாம் காத்து வந்த மௌன நிலையை தற்போது கடந்து விட்டதாகக் குறிப்பிட்ட அவர், உலகளவில் மலேசியாவுக்கு இருந்த நற்பெயருக்கு நஜிப்பின் ஆட்சிக் காலத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் தாம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
“எனக்கு கோபம் ஏதுமில்லை. நான் எனது நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக அமைதி காத்து வந்தேன். ஆனால் அத்தகைய நிலையை தற்போது கடந்துவிட்டேன். மிகச் சிறந்த நிர்வாகத்துக்காக நமது நாடு பலரால் அறியப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அத்தகைய நிலை இல்லை. வெளிநாட்டு ஊடகங்கள் மலேசியாவை மிகவும் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்துகின்றன,” என்று மகாதீர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் படாவியின் பதவிக் காலத்தின்போது அவரது தலைமைத்துவம் குறித்தும் மகாதீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.