Home இந்தியா இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஆம் ஆத்மியில் இணைகிறாரா?

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஆம் ஆத்மியில் இணைகிறாரா?

675
0
SHARE
Ad

narayana murthyபுது டெல்லி, ஏப்ரல் 5 – இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான இன்ஃபோசிசின் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அவரை கட்சியில் இணைக்க அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த செவ்வாய்க் கிழமை, நாராயண மூர்த்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியாவை டெல்லியில் சந்தித்தார். இன்ஃபோசிஸ் முன்னாள் இயக்குனர் வி பாலகிருஷ்ணன் கடந்த வருடம் ஆம் ஆத்மியில் இணைந்தது போல் நாராயண மூர்த்தியும் ஆம் ஆத்மியில் இணையப் போகிறார் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்ட நிலையில், ‘அக்சய பாத்ரா’ (Akshaya Patra) எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை  நடத்தவே மூர்த்தி, கெஜ்ரிவாலை சந்தித்ததாக பின்னர் கூறப்பட்டது.

நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் பெங்களூரில் அரசு சாரா தொண்டூழிய அமைப்பு ஒன்றை நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இது பற்றி அக்சயா பாத்ரா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கடந்த முறை பெங்களூரு வந்த கெஜ்ரிவால் எங்கள் அமைப்பிற்கு வருகை புரிந்தார். டெல்லியில் இந்த அமைப்பை ஏற்படுத்தி, 2020-ம் ஆண்டிற்குள் 50 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம் என்பதையும் தெரிந்து கொண்டார்.”

“இந்நிலையில் இத்திட்டத்தை துரிதப்படுத்தவே நாராயண மூர்த்தி சமீபத்தில் கெஜ்ரிவாலை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார்” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், டெல்லி கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா, டெல்லி கல்வித் துறையிலும், தகவல் தொடர்புத் துறையிலும் நாராயண மூர்த்தியின் பங்கு பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் காரணமாகவே மூர்த்தியை கெஜ்ரிவாலிடம் அறிமுகம் செய்துள்ளதாகவும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகின்றன.