காஜாங், ஏப்ரல் 5 – இன்று அதிகாலை காலமான தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து காஜாங்கிலுள்ள அவரது தந்தையின் இல்லம் வந்தடைந்தார்.
ஆயுதம் தாங்கிய சிறை பாதுகாவலர்கள் அவரோடு உடன் வந்தனர்.
அன்வாருடன் சோகத்தைப் பகிர்ந்து கொள்ளும் உறவினர்களும், நண்பர்களும்..
பின்னர் அவர் சோகத்துடன் தனது தந்தையின் நல்லுடல் முன் அமர்ந்து புனித குர்ஆன் வாசகங்களை ஓதினார். டத்தோ இப்ராகிம் தனது 96வது வயதில் காலமானார்.
அன்வாரின் தந்தை டத்தோ இப்ராகிமின் இறுதிச் சடங்கில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்றைய சோஹோர் தொழுகைக்குப் பின்னர் டத்தோ இப்ராகிமின் நல்லுடல் சுங்கை ராமால் இஸ்லாமிய மயானக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்வார் தற்போது ஓரினப் புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
அன்வாரின் தந்தையின் இல்லத்தில் துன் மகாதீர் …
முன்னதாக காலை 10.49 மணியளவில் வருகை தந்த டாக்டர் மகாதீர், அன்வாரின் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அன்வார் வருவதற்கு முன்பாக அந்த இடத்தை விட்டு அகன்றார்.
இருப்பினும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா தொடர்ந்து அங்கேயே இருந்து தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.
அன்வாரின் தந்தையை தங்களுக்கு நீண்ட நாட்களாகத் தெரியும் என்றும் அன்வார்-வான் அசிசா திருமணத்திற்கு முன்பே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இப்ராகிமை நாங்கள் அறிவோம் என்றும் மகாதீரின் துணைவியார் சித்தி ஹஸ்மா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அன்வாரின் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குறித்து மலேசியா கினி இணைய செய்தித் தளமும், அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசையும் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.