கோலாலம்பூர், ஏப்ரல் 5 – நேற்று மாலை செமினியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழு விசாரணைகள் நடைபெற வேண்டுமென பிரதமர் நஜிப் துன் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று செமினியில் விபத்து நடந்த கம்போங் சுங்கை பெனிங் பகுதிக்கு மாலை 4.55 மணியளவில் விரைந்த நஜிப், “இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் அதிகாரபூர்வ உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நம்பத் தகுந்த தகவல்களின்படி, அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும், கட்சிக்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றிய இரண்டு முக்கிய பிரமுகர்களை நாம் இழந்துள்ளோம்” என வருத்தத்துடன் கூறினார்.
நேற்றைய விபத்தில் காலமான அறுவரில் முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ், பிரதமரின் தலைமைச் தனிச் செயலாளர் டத்தோ அஸ்லின் அலியாஸ் ஆகியோரும் அடங்குவர்.
“ஜமாலுடினின் மறைவு தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் மிகப் பெரிய சோகமும் இழப்புமாகும். காரணம் அவரை பல்கலைக்கழக மாணவ காலம் முதல் எனக்குத் தெரியும் என்பதோடு எனது கட்சி, அரசியல் போராட்டங்களில் எப்போதும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்து வந்தவர்” என்றும் நஜிப் கூறினார்.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமாலுடின் பற்றி விவரித்தபோது நஜிப் கண்கலங்கினார்.
டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் மிகுந்த திறன் வாய்ந்தவர். அரசாங்கத்திற்காக கட்சிக்காக, நாட்டுக்காக, பல சேவைகள், தியாகங்கள் புரிந்தவர். வெளிநாடுகளில் அவருக்கு பல வகைகளிலும் சிறந்த தொடர்புகள் இருந்தன” என்றும் நஜிப் வர்ணித்தார்.
ஜமாலுடின் அமெரிக்காவின் மலேசியத் தூதராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தனது செயலாளராகப் பணியாற்றிய டத்தோ அஸ்லினும் தனது அலுவலகத்தில் தலைமைப் பணியாளராக இருந்தார் என்றும் பல முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது என்றும், தனியார் நிறுவன பொறுப்புகளை ஒதுக்கி விட்டு, அரசாங்க சேவைக்காக அவர் தம்மிடம் பணியாற்றினார் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
அவர்களின் இழப்பினால் தான் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் நஜிப் தெரிவித்திருக்கின்றார்.