Home அவசியம் படிக்க வேண்டியவை சைருலைச் சந்தித்த காவல் துறையினர் யார்? வெளியிடுங்கள் – லிம் கிட் சியாங்

சைருலைச் சந்தித்த காவல் துறையினர் யார்? வெளியிடுங்கள் – லிம் கிட் சியாங்

603
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், ஏப்ரல் 5 – மலேசியக் காவல் துறையினர் ஆஸ்திரேலியாவில் சைருலைச் சந்தித்து விசாரணை நடத்தினர் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு உடனடி பதிலடியாக, தன்னை யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்றும் காவல் துறைத் தலைவர் பொய் சொல்கிறார் என்றும் சைருல் கூறியிருந்தார்.

தற்போது சிட்னியில், வில்லாவுட் என்ற இடத்தில் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாமில் சைருல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

சைருல், மலேசியாகினி இணைய செய்தித் தளத்துடன் நடத்திய தொலைபேசி வழியான சந்திப்பில் காவல் துறைத் தலைவர் பொய் சொல்கிறார் என்று கூற, காலிட் அபு பாக்காரோ, உங்களுக்குத் தெரிந்த ரகசியங்களைக் கூறுங்கள் என்ற சைருலுக்கு சவால் விட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

khalidஇது குறித்து தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்திருக்கும் ஜசெக தலைவரும், ஜசெகவின் நாடாளுமன்றத் தலைவருமான லிம் கிட் சியாங் இந்த விவகாரத்தில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க, காவல் துறையைச் சேர்ந்த எந்த அதிகாரிகள், எப்போது சிட்னியில் சைருலைச் சந்தித்தார்கள் என்பது குறித்து காலிட் அபு பாக்கார் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இப்படிச் செய்யாத காரணத்தால், காலிட் தனது வாதத்தில் ஒரு பெரிய ஓட்டையை விட்டு வைத்திருக்கின்றார் என்றும் லிம் கிட் சியாங் கூறியிருக்கின்றார்.

“இப்போதும் காலதாமதம் ஆகிவிடவில்லை. இப்போதுகூட சிட்னியில் சைருலைச் சந்தித்து விசாரணை நடத்த  அனுப்பப்பட்ட காவல் துறை அதிகாரிகள் யார் என்பதை காலிட் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அப்போதுதான் பொய் சொல்வது காலிட்டா? அல்லது சைருலா? என்பது தெளிவாகும்” என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறு காலிட் செய்யவில்லை என்றால், மக்களின் எண்ணமும் தீர்ப்பும் சைருலுக்கு சாதகமாகவே இருக்கும், காவல் துறையினர் தன்னைச் சந்திக்கவில்லை என்ற அவரது கூற்றைத்தான் மக்கள் நம்புவார்கள் என்றும் லிம் கிட் சியாங் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றார்.