சென்னை, ஏப்ரல் 5 – தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி என்பர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி, ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 ஓட்டுனர்கள் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அரசியல் ரீதியிலான நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி ஆளும் அ.தி.மு.க அரசின் அமைச்சர் என்பதால், தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புலனாய்வுத் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதை தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. மேலும், வழக்கும் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று (சனிக் கிழமை) இரவு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், இன்று காலையில் அவரை கைது செய்தனர்.