காஜாங், ஏப்ரல் 5 – இன்று நடைபெற்ற அன்வார் இப்ராகிமின் தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் அன்வாரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்க யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிலர் வருகை தந்தனர்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர்
அவர்களில் முதலாமவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரும் அவருடைய துணைவியாரும். மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையில் தொடரும் தீராத அரசியல் பகை பற்றி சொல்லவே தேவையில்லை. இருப்பினும், மலாய்க்காரர்களுக்கே உரித்தான நாகரிகத்தின் மற்றொரு பிரதிபலிப்பாக அன்வாரின் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்த வந்ததன் மூலமாக தனது நற்பெயரை மேலும் ஒருபடி மகாதீர் உயர்த்திக் கொண்டிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மகாதீரின் வருகையைப் பற்றிக் குறிப்பிட்ட அன்வாரின் மனைவி வான் அசிசா, அவரது வருகை தங்களுக்கும் ஆச்சரியத்தைத் தந்ததாகத் தெரிவித்திருக்கின்றார்.
1998இல் தனது துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை பதவியில் இருந்து அகற்றி, வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியவர் மகாதீர் என்பது மலேசியாவில் அனைவரும் அறிந்த அரசியல் சம்பவங்களாகும்.
“எனது மாமனார் சுகாதார அமைச்சில் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் டாக்டர் மகாதீரும் அவரது துணைவியாரும் மருத்துவர்கள் என்ற ரீதியில் அவருடன் பணியாற்றியிருக்கின்றனர். அந்த நட்புக்காகவும், பரஸ்பர முஸ்லீம்கள் என்ற அடிப்படையிலும் அவர்கள் இறுதிச் சடங்குகளுக்கு வருகை தந்தார்கள்” என்றும் வான் அசிசா கூறினார்.
1959 முதல் 1969 வரை பினாங்கின் செபராங் பிறை தெங்கா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் அன்வாரின் தந்தையான டத்தோ இப்ராகிம். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் 1964 முதல் 1969வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் துன் மகாதீர்.
உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி
மற்றொரு அதிசய வருகையாளர் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி. அன்வாரின் தந்தையார் வசித்து வந்த காஜாங், கண்ட்ரி ஹைட்ஸ் குடியிருப்புப் பகுதியில்தான் உள்துறை அமைச்சரும் வசித்து வருகின்றார்.
இருந்தாலும், அம்னோவின் உதவித் தலைவராகவும், நஜிப்பின் நெருக்கமான தளபதிகளில் ஒருவராகவும் செயல்பட்டு வரும் சாஹிட் பல தருணங்களில் அன்வாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர். இருப்பினும் அவரும் இன்று அரசியல் பகைமையை புறந்தள்ளி, மரியாதை கருதி, அன்வாரின் தந்தைக்கு நேரடியாக வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்வார் தந்தை மறைவைத் தொடர்ந்து உடனடியாக அன்வாருக்கு சிறப்பு அனுமதி வழங்கி உரிய நேரத்தில் அவர் வருகை தருவதற்கும், இறுதிச் சடங்குகளில் நேரத்தைக் கழிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ததில் சாஹிட் ஹாமிட் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஒரு காலத்தில் அன்வாரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் சாஹிட். மகாதீருக்கு எதிராக அம்னோ பேரவையில் எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் அன்றைய இளைஞர் பகுதித் தலைவர் சாஹிட்டும் ஒருவர். ஆனாலும், இன்னொரு புறத்தில் அப்துல்லா படாவியின் முயற்சியால் மீண்டும் மகாதீருடன் சமாதானமானார்.
அதே சமயத்தில், நஜிப்பின் அரசியல் செயலாளராகப் பணியாற்றியவர் என்ற முறையிலும், மகாதீர்-அன்வார் போராட்டத்தில் நஜிப் பக்கம் சார்ந்து நின்ற சாஹிட், கால ஓட்டத்தில் நஜிப்பின் நம்பிக்கையாளராக அரசியலில் தொடர்ந்து, இன்றைக்கு அம்னோவின் முதலாவது உதவித் தலைவராகவும் உள்துறை அமைச்சராகவும் உயர்ந்து நிற்கின்றார் சாஹிட்.
ஒருகாலத்தில் அன்வாரின் ஆதரவாளராக அவருக்குக் கீழ் இருந்த சாஹிட், இன்றைக்கு அன்வார் சிறையிலிருந்து தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதியை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் உள்துறை அமைச்சராக மாறியிருப்பது, காலத்தின் கோலம்தான்!
அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில்
அன்வார் தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஆச்சரியமாக தலையைத் திருப்பிப் பார்த்த மற்றொரு வருகையாளர் அம்னோவின் மகளிர் தலைவி, ஷரிசாட் அப்துல் ஜலில்.
தனது கணவர் முகமட் சாலே இஸ்மாயிலுடன் வந்து, வான் அசிசாவுக்கு ஆறுதல் கூறிவிட்டு, இறுதிச் சடங்கில் சில நிமிடங்கள் இருந்து விட்டு சென்றார் ஷரிசாட்.
லெம்பா பந்தாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷரிசாட்டை 2008 பொதுத் தேர்தலில் தோற்கடித்து, அவரது அரசியல் வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தவர் அன்வாரின் புதல்வி நூருல் இசா.
அதன்பின்னர் செனட்டராகவும், அம்னோ மகளிர் தலைவியாகவும் பதவியில் இருந்தாலும் அரசியல் ரீதியாக இன்றுவரை பெரிய அளவில் ஷரிசாட் தலையெடுக்க முடியாமலேயே போய்விட்டது.
முன்னாள் பினாங்கு முதல்வர் கோ சூ கூன்
பினாங்கு மாநிலத்தின் முன்னாள் தலைவரும், கெராக்கான் கட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் கோ சூ கூன்னின் அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் அன்வாருக்கு முக்கிய பங்குண்டு.
கெராக்கானின் தலைவர் டாக்டர் லிம் கெங் எய்க் பதவியிலிருந்து விலக அவருக்குப் பதிலாக கட்சியின் தேசியத் தலைவராக வந்த கோ சூ கூன், பினாங்கு முதல்வராக அசைக்க முடியாத நிலையில் இருந்தார்.
ஆனால், 2008ஆம் பொதுத் தேர்தலில் பினாங்கு மலாய்க்காரர்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்றிருந்த அன்வார் இப்ராகிமும், ஜசெகவும் இணைய – பாஸ் கட்சியும் உடன் சேர்ந்து பக்காத்தான் ராயாட் கூட்டணி உருவாக – அதன் மூலம் தனது முதல்வர் பதவியை இழந்த கோ சூ கூன், அதன் பின்னர் தனது கெராக்கான் கட்சி தலைவர் பதவியையும் விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
“நான் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலம் முதற்கொண்டே அன்வாரின் தந்தையை எனக்குத் தெரியும். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அன்வாருக்கு முன்பாகவே அவரை எனக்குத் தெரியும். நாற்பது ஆண்டுகால நட்புக்காக வந்தேன்” என்று கோ சூ கூன் கூறியிருக்கின்றார்.
ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ்
வர்த்தக உலகில் பிரபலமாக இருப்பவர்கள் அதிலும் குறிப்பாக அரசாங்கத் தொடர்புகளில் இருக்கும் வணிகப் பிரமுகர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் எந்த நிகழ்ச்சியையும் தவிர்ப்பது வழக்கம்.
ஆனால், வணிக உலகில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதோடு, மலிவு விலை விமான நிறுவனத்தை நடத்துபவர் என்ற முறையில் போக்குவரத்து அமைச்சுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்றாலும், அதையெல்லாம் தாண்டி, மரியாதை கருதி, அன்வாரின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்.
இருப்பினும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர் எந்தவித கருத்தையும் பத்திரிக்கையாளர்களிடம் கூறாமல் புறப்பட்டுச் சென்று விட்டார் டோனி பெர்னாண்டஸ்.
-இரா.முத்தரசன்