புதுடெல்லி, ஏப்ரல் 6 – இந்தியாவில் தந்தி அனுப்புவதை தொடர்ந்து 135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தந்தி அனுப்பும் நடைமுறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கொழிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் சேவைக்கு முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களில் மணி ஆர்டர் சேவை மூலம் பண விநியோகம் நடைபெற்று வருகின்றன.
உடனடி பண பரிமாற்றத்திற்கு பல்வேறு நடைமுறைகள் தற்காலத்தில் புழக்கத்தில் வந்துவிட்டதால் மணி ஆர்டர் சேவை முறைக்கு மூடுவிழா காண உள்ளது என அஞ்சல்துறை தெரிவித்தது.