Home நாடு பொடா சட்டம் இன்னொரு ஐஎஸ்ஏ – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து!

பொடா சட்டம் இன்னொரு ஐஎஸ்ஏ – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து!

510
0
SHARE
Ad

jail-prisonகோலாலம்பூர், ஏப்ரல் 6 –  பயங்கரவாத தடுப்பு சட்டம் அமல்படுத்துவது (பொடா) குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்திற்கு, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் ஒருவரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கலாமா? என்பதையும், விசாரணைக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமா? அல்லது சிறையில் அடைக்கப்பட வேண்டுமா? என்பதையும் உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அமலில் உள்ள முன் விசாரணை தடுப்புச் சட்டம் இதை ஒத்து உள்ளது என்று கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வாங் சென் கூறியுள்ளார்.

மேலும், “இது தான் நிலையான ஒன்று. மலேசியாவும் காமன்வெல்த் நாடுகளைப் பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் சட்டங்களையும் இது சமநிலைப்படுத்தும்” என்றும் வாங் சென் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜனநாயகத்தை தியாகம் செய்து தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடக்கூடாது. காரணம் அந்த நடவடிக்கை மக்களை தவறாக வழிநடத்தி இன்னும் தீவிரப்படுத்திவிடும் என்றும் வாங் சென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகரிடம் இந்த சட்டதிருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். பொடா மூன்றாவது கட்டத்திற்கு நகர்வதற்கு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் விவாதத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்றும் வாங் சென் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மதியம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், பொடா சட்ட தீர்மானம் இரண்டாவது முறையாக விவாதிக்கப்பட்டது. உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி ஜாபர் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும், ஒழிக்கப்பட்ட கொடுமையான ஐஎஸ்ஏ (உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்) சட்டத்தின் இன்னொரு வரவு தான் இந்த பொடா சட்டம் என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.