ஜகார்தா, ஏப்ரல் 9 – நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவே பயங்கரவாத தடுப்புச் சட்டமான ‘பொடா’ கொண்டு வரப்பட்டதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான ஐஎஸ்ஏ -வும், பொடாவும் வெவ்வேறானவை என்றும் அவர் கூறினார்.
“புதிதாக வந்துள்ள பொடா சட்டத்தை சிலர் ‘ஐஎஸ்ஏ 2’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல. ஏனெனில் பொடா என்பது பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டுமே கையாள்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது,” என்றார் முகைதீன் யாசின்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொடா சட்டத்தைப் பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர் உத்தரவிடத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், அச்சட்டத்தைப் பயன்படுத்துவதில் அரசியல் அதிகாரம் குறுக்கிடாது என்ற உறுதிமொழியை அரசாங்கம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஐஎஸ்ஏ சட்டம் கைவிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மலேசியர்கள் சிலர் வெளிநாடுகளில் நிகழும் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அத்தகையவர்களின் செயல்பாடுகளையும் தடுக்கக் கருதியே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“பயங்கரவாத ஒழிப்பு வாரியத்தின் உறுப்பினர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரால் நியமிக்கப்படுவர். மேலும் இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார் தங்களது குடும்பத்தாரைக் காண முடியும். மேலும் அவர்கள் விரும்பிய வழக்கறிஞர்களையும் தங்களுக்காக நியமிக்க முடியும்,” என்றார் முகைதீன் யாசின்.