கோலாலம்பூர், ஏப்ரல் 7 – எதிர்வரும் மே 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ், நுண்கலைக் கோயில், சுவாமி சதானந் அரங்கத்தில் குமாரி கிருத்திகாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
குமாரி கிருத்திகா சங்கீத, நடன பாரம்பரியத்தில் வந்தவர் என்பதோடு , சமீபத்தில் மிகச் சிறப்பாக ‘காப்பியம்’ நாட்டிய நாடகத்தை வெற்றியுடன் படைத்த மதுர நாட்டிய மாமணி திருமதி குருவாயூர் உஷா அவர்களின் திருமகளாவார்.
சிறுவயது முதலே நாட்டியத்திலும், சங்கீதத்திலும் ஆர்வம் கொண்ட கிருத்திகா தனது தாயாரை குருவாகக் கொண்டு நடனத்தை ஆரம்பிக்க, ஸ்ரீ அப்துல்லா மற்றும் ஸ்ரீமதி சியாமளா நாராயணனும் அவருக்கு நடனம் கற்பித்து அவரது திறமைக்கு மெருகேற்றினர்.
கிருத்திகாவின் ஆர்வமும், திறமையும், சோர்வில்லா கலைத்தாகமும், அர்ப்பணிப்புத் தன்மையும் அவருக்குத் தன் பிறந்த ஊரான மலேசியாவில் பற்பல நடன வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. அது மட்டுமல்லாது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் நடனமாட சிறப்பான வாய்ப்பைப் பெற்றார். தனது சுய முயற்சியால் சற்றும் தளராது மலேசியா மற்றும் இந்தியாவில் எல்லா நவராத்திரி நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கேற்று வருகிறார்.
கிருத்திகா இன்று தனது பதினாறாவது வயதில் பரதப்பயிற்சியை முழுமையாக முடித்து, முதல் நிகழ்வாக ‘ஹம்ஸ நிருத்தியம் நாட்டிய நிகழ்ச்சி’ யை அரங்கேற்றவுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் வழி திரட்டப்படும் நிதி நுண்கலைக் கோயிலின் சமுதாயப் பணிக்காக வழங்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகாவின் நடன அசைவுகள் சிலவற்றை இங்கே காணலாம்.