திருப்பதி, ஏப்ரல் 7 – ஆந்திரக் காடுகளில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி 12 தமிழர்கள் உட்பட 20 பேரை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
தமிழ்நாடு-ஆந்திரா எல்லையோரக் காடுகளில் செம்மரக் கடத்தலை தவிர்க்க அம்மாநில காவல் துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் தோட்ட வேலை செய்யும் பல அப்பாவித் தமிழர்களும் பாதிக்கப்படுவதாக அவ்வபோது சர்ச்சைகள் எழுவது வழக்கம்.
இந்நிலையில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தமிழக தொழிலாளர்கள் 200 பேர் செம்மரம் வெட்டுவதாகக் கூறி ஆந்திரக் காவல்துறையினர் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட அந்த வனப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர காவல்துறையினரின் இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக, இரு மாநில எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.