சிட்னி, ஏப்ரலு 8 – போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை மீட்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை எதிர்த்து சட்ட ரீதியாக இருவரும் விண்ணப்பித்த கடைசி மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மயூரன் சுகுமாறன், அண்ட்ரூ சான் ஆகிய அவ்விரு ஆடவர்களும் எந்நேரத்திலும் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் டோனி அப்பாட், மரண தண்டனையை தடுத்து நிறுத்த தங்களால் இயன்ற அனைத்து வகையிலும் முயற்சித்து வருவதாகக் கூறினார்.
“இதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். மரண தண்டனை தொடர்பில் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு என்னவென்பது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக இந்தோனேசிய அதிபர் விடோடோவுடன் பலமுறை பேசியுள்ளேன். அந்த உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து ஏதும் கூற விரும்பவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறேன்,” என்றார் டோனி அப்பாட்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேருக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசு.
இவர்களில் பிரேசில், நெதர்லாந்து பிரஜைகளும் அடங்குவர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவ்விரு நாடுகளும் இந்தோனேசியாவுக்கான தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டவர்களை மீட்க இந்தோனேசிய அரசுடன் போராடி வருகிறது ஆஸ்திரேலியா.
‘பாலி நைன்’ என்றழைக்கப்படும் போதை கடத்தல் கும்பலின் வட்டார தலைவர்களாக கருதப்படும் சுகுமாறன் (33 வயது) மற்றும் சான் (31 வயது) ஆகிய இருவரும் இந்தோனேசியாவில் இருந்து ஹெராயின் கடத்த முயன்ற குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2006ஆம் ஆண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியக் கைதிகள் இருவரும் சிறைச்சாலையில் …(பழைய கோப்பு படம்)