கொலோன், ஏப்ரல் 13 – ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் இருந்து இத்தாலியின் மிலன் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த ஜெர்மன்விங்ஸ் விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று மாலை ஜெர்மன்விங்ஸ் விமானம் 4U826, 126 பயணிகளுடன் கொலோனிலிருந்து, மிலன் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது. அந்த சமயத்தில் ஜெர்மன் காவல் துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும், விமானம் இருந்த பான் விமான நிலையத்திற்கு அதிரடியாக நுழைந்னர்.
அவர்கள், 4U826 விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானக் குழுவினரை அவசரமாக வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதன் பின்னரே மர்ம நபர்களால், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரிய வந்தது.
காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் முடிவில் விமானத்தில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்க வில்லை. அதன் பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மிலன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்தில் தான், ஜெர்மன்விங்ஸ் விமானம் 9525, ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். விமான விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், துணை விமானி லுபிட்ஸ் வேண்டுமென்றே விமானத்தை மலைத் தொடரில் மோதச் செய்தது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.