பெய்ஜிங், ஏப்ரல் 14 – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு உலக நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில், சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில், இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும். அது இந்தியாவின் உரிமை என இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் பிரான்ஸ் பயணத்தின் போது தெரிவித்து இருந்தார். இதற்கு, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகள் வரவேற்பு அளித்தன. ஆனால், சீனா மோடியின் கூற்றுக்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில் “அனைத்துலக விவகாரங்களில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், ஐநா பாதுகாப்பு அமைப்பில், இந்தியா நிரந்தர உறுப்பினராவது தொடர்பான இந்தியாவின் விருப்பத்தில் புரிதல் என்பது அவசியமான ஒன்று” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்த விவகாரத்தில் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.