சிங்கப்பூர், ஏப்ரல் 14 – எனது தந்தையின் சிந்தனைகளையும், அவரின் மதிப்பு மிக்க செயல்களையும் நாம் வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என லீ குவான் இயூவின் மகனும் சிங்கப்பூரின் பிரதமருமான லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் மறைவிற்குப் பின்னர், அவரின் சாதனைகளையும் அந்நாட்டிற்காக அவர் செய்த சேவைகளையும் எந்தவகையில் பெருமை சேர்க்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது யோசனைகளை லீ சியான் லூங்கிடம் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அப்போது, சியா யாங் யாங் என்ற உறுப்பினர், லீ குவான் இயூவிற்கு நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதை விட, அவரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் செயல்களில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
இது குறித்து லீ சியான் லூங் கூறுகையில், “சியா யாங் யாங்கின் கூற்றுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். அவர் கூறியது போல் எனது தந்தையின் சிந்தனைகளையும், அவரின் மதிப்பு மிக்க செயல்களையும் நாம் வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.”
“அதே சமயத்தில், அவரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நினைவுச் சின்னங்கள் அமைப்பது அவசியமாகும். ஏனெனில் அவை, நமது உயரிய நோக்கங்களுக்கு வலு சேர்க்கும். அதன் மூலம் நாம், வெற்றிகரமான சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்று கூறியுள்ளார்.