Home நாடு பெர்மாத்தாங் பாவ் இந்திய வாக்குகளின் பொறுப்பு மஇகாவுக்கே வழங்க வேண்டும் – ஹென்ரி வலியுறுத்து

பெர்மாத்தாங் பாவ் இந்திய வாக்குகளின் பொறுப்பு மஇகாவுக்கே வழங்க வேண்டும் – ஹென்ரி வலியுறுத்து

601
0
SHARE
Ad

Henryபட்டவொர்த், ஏப்ரல் 14 – பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள தகவல்களின்படி பிபிபி கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்குகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முடிவை தேசிய முன்னணி தலைமைத்துவம் உடனடியாக மீட்டுக் கொண்டு, இந்திய வாக்குகளுக்கு பொறுப்பாக மஇகாவையே நியமிக்க வேண்டும் என்று பினாங்கு மஇகா தொடர்புக்குழுத் துணைத் தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் வலியுறுத்தி இருக்கின்றார்.

“இந்திய வாக்காளர்கள் இருக்கும் எந்த ஒரு தொகுதியிலும் அந்த வாக்குகளை தேசிய முன்னணி சார்பில் கவரும் பொறுப்பு மஇகாவுக்கே வழங்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மஇகா யாருடனும் சமரசம் செய்து கொள்ளாது” என்றும், பாகான் மஇகா தொகுதித் தலைவருமான ஹென்ரி இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

Loga Bala Mohanமஇகாவில் எங்களுக்குள் ஆயிரம் உட்கட்சிப் பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய சமுதாயத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதிலும், அவர்களுக்கான சமுதாயப் பணி ஆற்றுவதிலும் எப்போதுமே மஇகாதான் முன்னணியில் இருந்து வருகின்றது என்றும் டத்தோ ஹென்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

“தனிப்பட்ட முறையில் டத்தோ லோகா பாலமோகன் (படம்)  எனக்கும் நண்பர்தான். அவரது சிறந்த பணிகளையும், திறமைகளையும் நானும் அறிவேன். இது அவரைப் பற்றிய குறைகூறல் அல்ல. ஆனால் இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனையாதலால் யாரோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இன்னொரு பலஇன கட்சியின் தலைவர் ஒருவரை இந்திய வாக்குகளைக் கவர்வதற்காக நியமித்ததை மஇகா பினாங்கு மாநிலத் தொடர்பு குழு ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை” என்றும் ஹென்றி தெரிவித்தார்.

மஇகா கிளைகளின் ஒத்துழைப்பு கிடைக்காது

ஆண்டு முழுவதும் இந்திய வாக்காளர்களோடு இணைந்திருந்து அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து பாடுபட்டு வருபவர்கள் மஇகா கிளைகள். இப்போது திடீரென்று இடைத் தேர்தல் காலத்தில் மட்டும் வேறு ஒரு கட்சியின் தலைவரைக் கொண்டு வந்து இந்திய வாக்குகளுக்கு பொறுப்பாளர் என நியமித்தால் பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் மஇகா கிளைகளின் ஒத்துழைப்பு தேசிய முன்னணிக்கு கிடைக்காது என்பதை தேசிய முன்னணித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹென்ரி வலியுறுத்தினார்.

najib“இதனால், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் எதிர்பார்த்த இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்கு கண்டிப்பாக வராது. இந்த முடிவால் தேசிய முன்னணி கடந்த 2013 தேர்தலை விட படுமோசமான தோல்வியை பெர்மாத்தாங் தொகுதியில் அடையும் எனவும் ஹென்ரி எச்சரித்தார்.

மஇகாவின் ஒத்துழைப்பின் துணை கொண்டுதான் இந்திய வாக்குகளை தேசிய முன்னணி கூடுதலாகப் பெற முடியும் என்றும் குறிப்பிட்ட ஹென்ரி, பிரதமர் நஜிப் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் வீசும் அன்வாருக்கு ஆதரவான அனுதாப அலையையும் மீறி, தேசிய முன்னணிக்கு கணிசமாக வாக்குகள் கிடைக்க வேண்டுமானால், அங்குள்ள சுமார் 4,500 இந்திய வாக்குகள் மிகவும் முக்கியமாகும் என்பதையும் ஹென்ரி நினைவுபடுத்தினார்.

எனவே, தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மஇகாவை இந்திய வாக்குகளுக்கான பொறுப்பாளராக நியமிக்காவிட்டால், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் உள்ள மஇகா கிளைகளின் – உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேசிய முன்னணிக்குக் கிடைக்காது என்றும் ஹென்ரி வலிறுத்தி உள்ளார்.