Home நாடு மைபிபியில் மோதல்: “லோகா பாலா போட்டிக்கு அனுமதி தரவில்லை” – கேவியஸ்

மைபிபியில் மோதல்: “லோகா பாலா போட்டிக்கு அனுமதி தரவில்லை” – கேவியஸ்

1406
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், சிகாம்புட் தொகுதியில் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் போட்டியிடுவார் என அறிவித்ததைத் தொடர்ந்து மைபிபிபி கட்சியில் மோதல் வெடித்துள்ளது.

“லோகா பாலா சிகாம்புட்டில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், மைபிபிபி கட்சியும் அனுமதி தரவில்லை” என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கேமரன் மலை நாடாளுமன்றம் மைபிபிபி கட்சி சார்பாக தனக்கு ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த கேவியஸ் சிகாம்புட்டில் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

எனினும், தேசிய முன்னணி வெளியிட்ட கூட்டரசுப் பிரதேச வேட்பாளர்கள் பட்டியலில் மைபிபிபி கட்சியின் லோகா பாலாமோகன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கேவியஸ் அனுமதியோடுதான் அவர் சிகாம்புட்டில் போட்டியிடுகிறார் எனக் கருதப்பட்டது.

ஆனால், மலேசியா கெசட் (Malaysia Gazette) என்ற இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் “மைபிபிபி கட்சியிலிருந்து சிகாம்புட்டில் போட்டியிட நான் யாரையும் தடுக்கப் போவதில்லை. லோகா அங்கு போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் நான் எதையும் கூறப் போவதில்லை. அது அவருடைய முடிவு. ஆனால் அந்த முடிவு என்னுடையதோ, கட்சியின் முடிவோ அல்ல” என கேவியஸ் கூறியிருக்கிறார்.

மைபிபிபி கட்சிக்கு கேமரன் மலை கிடைக்காததைத் தொடர்ந்து அதற்கு மாற்றாக வழங்கப்பட்டிருக்கும் சிகாம்புட்டில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிகாம்புட்டில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெல்வது கடினம் என்றும் கேவியஸ் கருத்து தெரிவித்துள்ளார். “சிகாம்புட் தொகுதி எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தால், கேமரன் மலையில் எங்களின் உழைப்பைக் கொட்டியதற்குப் பதிலாக சிகாம்புட்டில் பாடுபட்டிருப்போம். ஆனால், சில நாட்களுக்குள் இப்போது சென்று எதிர்க்கட்சியின் கோட்டையான அந்தத் தொகுதியில் எங்களால் என்ன செய்ய முடியும்?” என்றும் கேவியஸ் கேள்வி எழுப்பினார்.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து மைபிபிபி கட்சிக்குள் தலைமைத்துவப் போராட்டங்கள் வெடிக்கலாம் எனக் கருதப்படுகிறது.