Home நாடு தே.முன்னணியில் இருந்து வெளியேறுவதா? மைபிபிபி முடிவு செய்கிறது

தே.முன்னணியில் இருந்து வெளியேறுவதா? மைபிபிபி முடிவு செய்கிறது

1365
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குக் கூடும் மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டம் தேசிய முன்னணியிலிருந்து அந்தக் கட்சி வெளியேறுவதா என்ற அதிரடி முடிவை எடுப்பது குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கேமரன் மலை தொகுதி எங்களுக்கே வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் – கடந்த சில ஆண்டுகளாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தியும் – இறுதியில் அந்தத் தொகுதி மஇகாவுக்குத்தான் என தேசிய முன்னணி தலைமைத்துவம் முடிவெடுத்துவிட்டது.

வழக்கமாக மைபிபிபிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி ஒதுக்கும் நிலையில் இந்த முறை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அதனை ஏற்கப்போவதில்லை என்றும் கேவியஸ் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று பரபரப்பான சூழ்நிலையில் கூடும் மைபிபிபி கட்சியின் உச்சமன்றம், சில அதிரடி முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது விவாதிக்கப்படவிருக்கும் அத்தகைய முடிவுகளில் ஒன்றாகும்.

இதற்கிடையில் கேவியஸ் தனிப்பட்ட முறையிலும் சில முடிவுகளை எடுக்க உத்தேசித்திருப்பதாகவும், அந்த முடிவுகளையும் அவர் இன்றைய உச்சமன்றக் கூட்டத்தில் அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்