புத்ரா ஜெயா, ஏப்ரல் 14 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை ஆதரிக்கும்படி கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரை நிர்ப்பந்திக்கக் கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் (படம்) கூறியுள்ளார்.
கெடா மந்திரி பெசாரான முக்ரிஸ், அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ள அவர், உரிய நேரத்தில் தனது முடிவை முக்ரிஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
“முக்ரிஸ் மகாதீர் தற்போதுள்ள சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன். எனவே அவர் தனது நிலைப்பாடு குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவார் என்றும் கருதுகிறேன். அவர் அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி. என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்துள்ள அவரால் உரிய நிலைப்பாட்டை எடுக்க முடியும். எனவே அவருக்கு யாரும் அழுத்தம் தரவோ, அவரை நிர்பந்திக்கவோ தேவையில்லை,” என்று இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, அம்னோ இளைஞர் பகுதித் தலைவருமான கைரி கூறினார்.
2009ஆம் ஆண்டில் நடைபெற்ற அம்னோ இளைஞர் பகுதித் தலைவருக்கான தேர்தலில் முக்ரிசுக்கும் (படம்) கைரிக்கும் இடையிலான போட்டியில் வென்று இளைஞர் பகுதித் தலைவர் பதவியை முதன் முறையாகக் கைப்பற்றினார் கைரி ஜமாலுடின் என்பது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது.
முக்ரிசின் தந்தையான துன் மகாதீர் தற்போது பிரதமர் நஜிப் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதையடுத்து அம்னோ தலைவர்கள் பலரும் நஜிப்புக்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக புலப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முக்ரிஸ் மகாதீர் மட்டும் தனது நிலைப்பாடு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக அவரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.
மகாதீரின் கேள்விகளுக்கு நஜிப் முறையாக பதிலளிக்க வேண்டும் என கைரியும் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.