கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது ஊழல் விசாரணையை நடத்தக் குறிவைப்பதாலேயே அவரின் மகன்களான மிர்சான், மொக்சானி ஆகியோர் மீது விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கிறது என மகாதீரின் மற்றொரு மகன் முக்ரிஸ் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.
மிர்சான், மொக்சானி ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மகாதீர் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது என ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கையெழுத்திட்ட கடிதம் குறிப்பிட்டது என்றும் முக்ரிஸ் கூறினார்.
முக்ரிஸ், பெஜூவாங் கட்சியின்தலைவருமாவார். தன் சகோதரர்களுக்கு வழங்கப்பட்ட அந்த முன்அறிவிக்கை கடிதத்தைத் தான் கண்டதாகவும் அவர் கூறினார்.
30 நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மகாதீரின் மகன்கள் தங்களுக்கு மேலும் 30 நாட்கள் கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.