Home நாடு பாலியல் அடிமைகளாக இருந்த 3 உகாண்டா பெண்கள் மீட்பு!

பாலியல் அடிமைகளாக இருந்த 3 உகாண்டா பெண்கள் மீட்பு!

587
0
SHARE
Ad

M_Id_367162_Swiss_girl_rape

கோலாலம்பூர், ஏப்ரல் 17 – பாலியல் அடிமைகளாக பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வந்த உகாண்டா நாட்டுப் பெண்கள் மூவரை கோலாலம்பூரில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் மீட்டுள்ளது. மூவரும் வியாழக்கிழமை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அடிமைகளாக சிக்கித் தவித்த 3 இளம் பெண்களும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சித்தரவதைகளை எதிர்கொண்டதாக உகாண்டா தூதரக முதன்மைச் செயலர் சமந்தா மாபாசி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தாங்கள் மனிதநேயமற்ற வகையில் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டதாக மூவரும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது” என்றார் சமந்தா.

இம்மூவரைப் போல் மேலும் பலர் பாலியல் அடிமைகளாக சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்த உகாண்டா தூதர் ஸ்டீபன் முபிரு, அவர்களை மீட்க மலேசிய பாதுகாப்பு முகைமைகளின் உதவியை நாடியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“உகாண்டாவைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் மலேசியா, சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள். இத்தகையவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார் ஸ்டீபன் முபிரு.

இதற்கிடையே கோலாலம்பூரில் உகாண்டாவைச் சேர்ந்த மேலும் 20 பெண்கள், பாலியல் அடிமைகளாக இருப்பதாகவும், கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர்கள் பதுங்கி இருப்பதாகவும், மீட்கப்பட்ட 3 பெண்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மலேசியாவில் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தப்படும் உகாண்டா நாட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது குறித்து மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.