உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிரதாப்பூர் பகுதியில் செயின்ட் மேரி தேவாலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு, பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழா நள்ளிரவில் முடிவடைந்தது. பின்னர் தேவாலயத்தை பூட்டி விட்டு அனைவரும் சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சில மர்ம நபர்கள் இந்த தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளையும் சேதப்படுத்தினர்.
மேலும், அந்த ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த சிலைகளை உடைக்கவும் முயன்றனர். இந்நிலையில் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மணி ஒலித்தது. இதனால், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு கூடினர். அவர்கள் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர்.
இதனால், அங்கு பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.