கோலாலம்பூர், ஏப்ரல் 20 – கோலாலம்பூர்-கொச்சி நகரங்களுக்கு இடையேயான மலேசியா ஏர்லைன்சின் விமான சேவை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜெர்மனியின் பிராங்பர்ட், தாய்லாந்தின் கிரபி, சீனாவின் கன்மிங் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட உள்ளதாக மாஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
கடந்த வருடத்தில் நிகழ்ந்த இரு பெரும் பேரிடர்கள் மாஸ் நிறுவனத்தை முற்றிலும் முடக்கிய நிலையில், கசானா நிறுவனம் மாஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி, மீள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 12 அம்சத்திட்டத்தின் அடிப்படையில் மாஸ் நிர்வாகம் சீர் செய்யப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பெரிய அளவில் வர்த்தகம் ஈட்டாத நகரங்களுக்கான சேவையை நிறுத்திக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ மாஸ் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அதன் முதல் படியாகவே மேற்கூறிய நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.
இது குறித்து மாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அகமட் ஜவ்ஹாரி கூறுகையில், “அண்டை நாடுகளுடனான விமான சேவையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். மாஸ் நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்றுவதற்கு முன், செலவீனங்களைக் குறைக்க வேண்டும். தற்போது சில நகரங்களுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சில நகரங்களில் பெரிய அளவிலான வர்த்தகம் ஏற்படாததால், அத்தகைய முடிவினை எடுக்க வேண்டி உள்ளது” என்று கூறியுள்ளார்.