புதுடெல்லி, ஏப்ரல் 20 – டெல்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாவது வழித்தடங்களில், தானியங்கி ரயில்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இயக்க ஓட்டுனர்கள் அவசியமில்லை.
முகுந்த்பூர் – சிவ் விஹார் வழித்தடம் (58 கி.மீ) மற்றும் ஜனக்புரி (மேற்கு) – பொட்டானிக்கல் தோட்டம் வழித்தடம் (34 கி.மீ) ஆகிய இடங்களில் இந்த மெட்ரோ ரயில்களை இயக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வழித்தடங்களில் ரயில்களை வேகமாக இயக்கவும், குறுகிய கால இடைவெளியில், அதாவது 90 வினாடிகளுக்கு ஒரு ரயிலை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் அமைக்கப்படும், சமிக்ஞை தொழில்நுட்பங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் மேம்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், ரயில் பாதை தற்கொலைகளை தடுக்கப் பயன்படும் என்று கூறப்படுகிறது. மேலும், தானியங்கி ரயில்கள் எரிபொருளை குறைவாக செலவிடும் வகையிலும், ரயில் இயங்கும் போது கூடுதல் மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மின்சார சிக்கனத்திற்காக வழித்தடங்களிலும், ரயில் பெட்டிகளுக்குள்ளும் ‘எல்இடி’ (LED) விளக்குகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் 60 சதவீத பணிகள் முடிவடைந்ததால், தானியங்கி ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.