செர்டாங், ஏப்ரல் 20 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி கூறியுள்ளார்.
“இதுபோன்ற விவகாரங்களில் நான் இன வித்தியாசம் பார்ப்பவனல்ல. காவல் துறையினரும் இன வித்தியாசம் பார்க்கமாட்டார்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – எடுக்கப்படும்” என உறுதியுடன் கூறியுள்ள சாஹிட் “மதம் குறித்து தீய எண்ணத்துடன் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இங்கு செர்டாங்கில் உள்துறை அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த போது, சாஹிட் பத்திரிக்கையாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் என ‘ஸ்டார்’ இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
ஆனால், சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து கருத்துரைத்த முன்னதாக கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், அவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயாது என்று கூறியிருந்தார்.
தற்போது இதற்கு நேர்மாறாக, உள்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அம்னோ உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, “அம்னோ மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கின்றது. எனவே, மற்ற மதங்களை இழிவுபடுத்தும் அம்னோ உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அவர்கள் அதற்குரிய பிரதிபலன்களை எதிர்நோக்க நேரிடும்” என்றும் அம்னோ உதவித் தலைவருமான சாஹிட் கூறியிருக்கின்றார்.