Home நாடு “இன மோதலைத் தவிர்க்கவே சிலுவையை அகற்ற முனைந்தோம்” – ஐஜிபி சகோதரர் கூறுகிறார்

“இன மோதலைத் தவிர்க்கவே சிலுவையை அகற்ற முனைந்தோம்” – ஐஜிபி சகோதரர் கூறுகிறார்

628
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 – தாமான் மேடானில் சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன மோதலைத் தவிர்க்கவே நாங்கள் அவ்வாறு செய்ய முனைந்தோம் என விளக்கம் கூறியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் பேசிய டத்தோ அப்துல்லா அபு பாக்கார், அந்த வட்டாரத்தில் இருந்த கிறிஸ்துவ தேவாலயத்தின் நடவடிக்கைகள் தங்களின் இஸ்லாமிய மதத்தின் மீது ஊடுருவி ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்ற அச்சத்தினாலேயே நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன எனக் கூறியுள்ளார்.

Abdullah Abu Bakar Taman Medan

#TamilSchoolmychoice

டத்தோ அப்துல்லா அபு பாக்கார் (படம்; நன்றி; “ஸ்டார் இணைய செய்தித் தளம்) 

நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

டத்தோ அப்துல்லா, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரரும் ஆவார்.

தேவாலயத்தை அகற்றுவதற்குப் பதில் சிலுவையை அகற்றினோம்

“எங்கள் வட்டாரத்திலுள்ள இளைஞர்கள் அந்த தேவாலயத்தை முற்றாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், நாங்கள் சிலுவை சின்னத்தை மட்டும் அகற்றுவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தோம்” என்றும் அப்துல்லா தெரிவித்ததாக ஸ்டார் இணைய செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

“அந்த இளைஞர்கள், எங்களின் சமுதாயத்தில் மூத்தவர்கள் என்ற முறையில் எங்களை அணுகி பிரச்சனையைக் கூறி, தீர்வுகாணக் கேட்டுக் கொண்டார்கள். பிரச்சனை எல்லை மீறிப் போய்விடக் கூடாது என்பதற்காக நாங்களும் தலையிட்டுத் தீர்வு கண்டோம்” என்ற அப்துல்லா இன்று திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவரைச் (mayor) சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் இந்த விளக்கத்தை வழங்கினார்.

இந்தப் பிரச்சனையை பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவர் மாநில அளவில் கொண்டு சென்று விசாரிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அந்த தேவாலயம் அங்கு இடம் பெற்றிருக்க அவர்கள் முன் அனுமதி பெற்றிருந்தார்களா என்பது குறித்து ஆராயவிருப்பதாகவும் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.

“மேடம் விக்டோரியா என்ற தேவாலயத்தின் பிரதிநிதியையும் மற்றவர்களையும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்து எந்தவிதப் பிரச்சனையும் இன்றி தீர்வு கண்டோம். அவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சிலுவை சின்னத்தை அகற்ற ஒப்புக் கொண்டனர். பிரச்சனையை இளைஞர்களின் கைகளில் விட்டிருந்தால், நிலைமை மோசமாகியிருக்கும். எங்களின் அணுகுமுறையால் இனமோதலை மிகவும் சொற்ப அளவில் குறைப்பதில் வெற்றி பெற்றோம்” என்றும் அப்துல்லா கூறியுள்ளார்.

அரசியல் நோக்க நடவடிக்கை அல்ல!

தாமான் லிண்டுங்கான் ஜெயா அம்னோ கிளையின் தலைவருமான அப்துல்லா, எதிர்க்கட்சிகள் குறை கூறுவதைப் போன்று இது அரசியல் நோக்கத்தைக் கொண்டதல்ல என்றும் விளக்கினார்.

“எங்களில் சிலர் அம்னோ உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் இது எங்களின் முஸ்லீம் சமூகத்திற்கும் தேவாலயத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனைதான். நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். இந்தப் பகுதியில் இனங்களுக்கிடையில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதனால்தான் இதில் தலையிட்டோம்” என்றும் அப்துல்லா, பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள நேற்றைய சம்பவம் குறித்து விளக்கம் தந்துள்ளார்.

தனது சகோதரரான ஐஜிபி இந்த சம்பவம் குறித்து தன்னை அழைத்ததாகவும் அவரிடம் நடந்த உண்மையான நிலவரங்களை விவரமாகத் தெரிவித்துள்ளோம் என்றும் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பில் தேச நிந்தனைச் சட்டம் பாயாது என காவல் துறைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறியுள்ள வேளையில், உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடியோ, மதம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார்.