சென்னை, ஏப்ரல் 21 – ஜெயகாந்தனின் மறைவை வைத்து விளம்பரம் தேட முயற்சித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் செயலை ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி அம்பலப்படுத்தி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுதம் இதழில் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி சமூக ஊடகம் வாயிலாக கூறியிருப்பதாவது:-
“சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது. இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.”
“அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.”
“ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!
அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு இதுவரை வைரமுத்து தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.