புது டெல்லி, ஏப்ரல் 21 – இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ (Flipkart), இந்த வருடத்தின் இறுதிக்குள் தனது இணைய தளத்தை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. திறன்பேசிகள் மூலம் பிளிப்கார்ட்டின் வர்த்தகம் அதிகரித்து வருவதால், இணைய தள சேவையை நிறுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட்டின் சொந்த நிறுவனமான ‘மந்தரா’ (Myntra), மே 1-ம் தேதி முதல் தனது இணைய தள சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் தனது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மைக்கேல் அட்னானி கூறுகையில், “அடுத்த வருடம் முதல் எங்களின் சேவை செல்பேசிகளுக்கான தளத்தில் மட்டும் இருக்கும். ஏனெனில், பெரும்பாலான மக்கள் தங்கள் வர்த்தகத்தை திறன்பேசிகள் மூலமே மேற்கொள்கின்றனர்.”
“இந்தியாவில் கடந்த 18 மாதங்களில் இணைய போக்குவரத்து 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. திறன்பேசிகளுக்கான வர்த்தகமும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்க எங்கள் தளத்தை செல்பேசிகளுக்கு மாற்ற இருக்கின்றோம். இதன் மூலம் செயலிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.