ஜகார்தா, ஏப்ரல் 22 – பிரதமர் நஜிப்பின் இந்தோனேசிய பயணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அவரது ஆடம்பர வாழ்க்கை முறை என்று குறுப்பிட்டு இந்தோனேசிய பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
டெம்போ என்ற அப்பத்திரிகையில் ‘பிரதமரின் ஆடம்பர வாழ்க்கை’ (Hidup Mewah Sang Perdana Menteri) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் பிரதமர் தம்பதியர், குறிப்பாக ரோஸ்மா வாங்கியதாக கூறப்படும் விலையுயர்ந்த நகைகள் மற்றும் கைப்பைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலேசிய மை வாட்ச் (MyWatch) அமைப்பு, பிரதமர் தம்பதியரின் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் என்று கூறி வெளியிட்ட சில புகைப்படங்களும் அந்தக் கட்டுரையினூடே இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் மனைவி ரோஸ்மாவின் கைக்கடிகாரங்கள் சுமார் 79,200 ரிங்கிட் முதல் 486,000 ரிங்கிட் வரை விலை கொண்டவை என மை வாட்ச் (MyWatch) குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் டெம்போ இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் அந்த கைக்கடிகாரங்களையும் நஜிப்பின் ஊதியத்தையும் ஒப்பிட்டுள்ளனர்.
மேலும் நஜிப்பின் ஊதியம் ஆண்டுக்கு வெ.3,50,000 மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
“நஜிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் வாழ்க்கைமுறை மலேசியர்களிடயே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அக்கட்டுரை கூறுகின்றது.
நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிசா அசிஸ் கடந்த 2012-ல் நியூயார்க்கில் 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் ஒரு அடுக்குமாடி வீட்டையும், பின்னர் கலிஃபோர்னியாவில் 64 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் தனி வீட்டையும் மொத்தமாக பணம் கொடுத்து வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான செய்தியை இந்தோனேசிய இதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
அண்மைய சில மாதங்களாக பிரதமர் நஜிப் தம்பதியரின் ஆடம்பரங்கள் என்ற தலைப்பின் கீழ் உள்நாடு மற்றும் பல வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் தம்பதியர் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாக துன் மகாதீரும் செவ்வாய்க்கிழமை தனது இணையப் பக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.