திருப்பதி வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் என்றும் காவல்துறையினர், அவர்களை முன் கூட்டியே பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதா குற்றம் சாற்றப்பட்டது.
இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட மனித உரிமை ஆணைய அமர்வு ஐதராபாத்தில் விசாரணை தொடங்கியது.
ஆந்திர அரசு சார்பில் கூடுதல் டி.ஜி.பி. வினய் ரஞ்சன்ரே ஆஜர் ஆனார். அவரிடம் மனித உரிமை ஆணைய அமர்வு சரமாரி கேள்வி கேட்டு விசாரணை நடத்தியது. 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்ய காலதாமதம் ஏன் என்று கேட்டு ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு ஆந்திர மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் இந்த ஆணையம் உத்தரவிட்டது.