புது டெல்லி, ஏப்ரல் 25 – விவசாயியின் தற்கொலையில் தனது தவறு குறித்து மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவாலை, விவசாயியின் தந்தை மன்னிக்க மறுத்துவிட்டார். மாறாக அவர், கெஜ்ரிவாலின் தாமதிக்கப்பட்ட நடவடிக்கைகளும், மன்னிப்பும் இறந்து போன எனது மகனைத் திரும்பக் கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தியது. அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, கஜேந்திர சிங் என்ற விவசாயி, திடீரென மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். உடன் இருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை காப்பற்ற முயற்சி செய்வதற்குள் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலைக்கு முயன்றது கெஜ்ரிவாலுக்கு தெரிந்து இருந்தும் அவர் மேடையில் பேசத் தொடங்கினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தனது தவறுக்கு கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டார். எனினும், விவசாயியின் தந்தை அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கெஜ்ரிவாலின் ஒற்றை மன்னிப்பு என் மகனை திரும்பக் கொடுத்து விடுமா? இதே சம்பவம் அவரது மகனுக்கு நடந்து நான் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வாரா? பொறுப்பில்லாத இவர் எப்படி ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் வழி நடத்த முடியும்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இறந்த விவசாயியின் உறவினர்கள், அவரது தற்கொலை சம்பவத்தை புலனாய்வுப் பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.