மொதெரா (குஜராத்), ஏப்ரல் 25 – நேற்று இரவு இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாகப் பந்து வீசிய பெங்களூர் அணியினர் 20 ஓவர்கள் முடிந்தபோது 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியினரை 130 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க வைத்தனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது பெங்களூர் அணி. பெங்களூர் கேப்டன் வீராட் கோலியும், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கிரிஸ் கேய்ல் இருவரும் முதல் ஆட்டக்காரர்களாக ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சை எதிர்கொண்டனர்.
இடையில் கிரிஸ் கெய்ல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் வீராட் கோலி இறுதி வரை அபாரமாக விளையாடி பெங்களூர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
16.1வது ஓவரிலேயே, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 134 ஓட்டங்களை எடுத்ததன் வழி பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி வாகை சூடியது.
மிகவும் பலம் பொருந்திய – வரிசையாக வெற்றிகளை மட்டுமே கண்டு வந்த – ராஜஸ்தான் அணியை வீழ்த்தியிருப்பதன்வழி பெங்களூர் அணியினருக்கு இது ஒரு முக்கியமான வெற்றியாகும்.
இன்று சனிக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் குழுவை மும்பை நகரில் சந்திக்கின்றது.
சென்னையில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.