Home உலகம் விருதுகளை விட குழந்தையைக் காப்பாற்றியதே மகிழ்ச்சி – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பேட்டி!

விருதுகளை விட குழந்தையைக் காப்பாற்றியதே மகிழ்ச்சி – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பேட்டி!

588
0
SHARE
Ad

singaporeசிங்கப்பூர், ஏப்ரல் 24 – சிங்கப்பூரில் பேராபத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தையை மீட்ட தமிழர்கள் சுப்பிரமணியன் சண்முகநாதன் (35) மற்றும் பொன்னன் முத்துக்குமாருக்கு (24) சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் வீர தீரச் செயல் புரிந்ததற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஜூராங் ஜிஆர்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வேய் நெங் வழங்கினார்.

குழந்தையை மீட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உலக அளவில் பிரபலமடைந்து விட்ட அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை கமாண்டர் மைக்கேல் சுவா கூறுகையில்,

#TamilSchoolmychoice

“குழந்தையைக் காப்பாற்றிய சுப்பிரமணியன் சண்முகநாதனுக்கும், அவருடன் பணிபுரியும் பொன்னன் முத்துக்குமாருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

singapore2

குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது மாடிக்கு ஏறிய சண்முகநாதன், தாங்கள் எந்த ஒரு விருதினையும் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை பத்திரமாக மீட்டதே மகிழ்ச்சி என்றும் தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

விருது குறித்து சண்முகநாதன் பேசுகையில், “நாங்கள் இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. ஆபத்தில் இருந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றினோம். அவ்வளவு தான். நேற்று முழுவதும் எங்கள் தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விருது குறித்து முத்துக்குமார் கூறுகையில்,

“ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை.எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.

– சுரேஸ்குமார்

விருது பெறும் இரு தமிழர்களின் காணொளியைக் கீழே காண்க:-

https://www.youtube.com/watch?v=UFA0kd3LaT4