நியூயார்க், ஏப்ரல் 25 – உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு சுவிட்சர்லாந்து என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 117-வது இடத்தை பிடித்துள்ளது.
தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது சுவிட்சர்லாந்து. 2-வது இடத்தை ஐஸ்லாந்து. 3-வது இடத்தை டென்மார்க். 4-வது இடத்தை நார்வே. 5-வது இடத்தை கனடா பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் பாகிஸ்தான், வங்காளதேசம், பாலஸ்தீனம், ஈராக், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 117 ஆகும். பாகிஸ்தான் 81-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 109-வது இடத்தைப் பிடித்துள்ளது. உக்ரைனுக்கு 111-வது இடமும், பாலஸ்தீனத்துக்கு 108-வது இடமும், ஈராக்கிற்கு 112-வது இடமும் கிடைத்துள்ளது.
அதாவது இந்திய மக்களை விட தீவிரவாதத்தாலும், அரசியல் குழப்பத்தாலும், உள்நாட்டு போராலும் இன்னும் பல வகையிலும் அமையியற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், உக்ரைன், பாலஸ்தீனம், ஈராக் மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக இந்த பட்டியல் காட்டுகிறது.
வளர்ந்த நாடுகளான அமெரிக்காவுக்கு 15-வது இடத்திலும், இங்கிலாந்துக்கு 21-வது இடத்திலும், சிங்கப்பூருக்கு 24-வது இடத்திலும், சவுதி அரேபியாவுக்கு 35-வது இடத்திலும், ஜப்பானுக்கு 46-வது இடத்திலும், சீனாவுக்கு 84-வது இடத்திலும் உள்ளது.
உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன.