கோலாலம்பூர், ஏப்ரல் 25 – பிரதமர் நஜிப் பதவி விலகக் கோரி, தாம் நாடு தழுவிய சூறாவளிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான தகவலை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மறுத்துள்ளார்.
சில நிகழ்ச்சிகளில் பேச வருமாறு அழைக்கப்படும் பட்சத்தில் தாம் அங்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.
“நான் எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்று மக்கள் கேட்கிறார்கள். சிலருக்கு ஒன்றும் புரிவதில்லை. எனவே நான் அவற்றை மக்களுக்கு விளக்க வேண்டும் என்கிறார்கள். பேச வருமாறு என்னை அழைத்தால் பேசுகிறேன். அவ்வளவுதான்,” என்று இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது மகாதீர் தெரிவித்தார்.
பேச வருமாறு பல இடங்களிலிருந்து தமக்கு அழைப்பு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு பணி இருப்பதால் அனைத்து அழைப்புகளையும் தம்மால் ஏற்க இயலாது என்றார்.
கடந்த சில வாரங்களாக பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் குறித்த மகாதீரின் விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக ஊடகங்கள் மற்றும் அவரது வலைப்பக்கத்தில் வெளியிடும் கருத்துக்கள் பல்வேறு நாடளாவிய அளவில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.
அதேவேளையில், நஜிப் பதவி விலக வேண்டுமென்ற அறைகூவல்களும், அவருக்கு எதிர்ப்பான கண்டனங்களும் அதிகரிகப்பதற்கும் மகாதீரின் தொடர் தாக்குதல்கள் வழி வகுத்துள்ளன.