Home அவசியம் படிக்க வேண்டியவை 1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்

1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்

937
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 26 – 1 எம்டிபியின் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் (படம்) காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Khairuddin Ex UMNO Batu Kawan

1 எம்டிபியின் தலைவர் டான்ஸ்ரீ லோடின் வோக் மற்றும் நிர்வாகத் தலைவர் அருள் கந்தா கந்தசாமி ஆகியோரே அவரது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இருவர் ஆவர்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கோலாலம்பூர், டாங் வாங்கி காவல் நிலையத்தில் இப்புகாரை அளித்த கைருடின், கடந்த மார்ச் 11ஆம் தேதி 1 எம்டிபி தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 எம்டிபியின் சேமிப்புகள் மற்றும் சொத்துக்கள் குறித்து ஊழல்களை அம்பலப்படுத்தும் சுதந்திர இணையத் தளமான ‘சரவாக் அறிக்கை’யில் (Sarawak Report) குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் குறித்தும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“சரவாக் அறிக்கை இணையத் தள செய்திகளில் உண்மை இருக்குமெனில் அது குறித்த விசாரணை என்பது அவசியம். 1 எம்டிபி நிறுவனம் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் பதிலளித்தாக வேண்டும். நாம் அனைவரும் வரி செலுத்துகிறோம். மேலும் 1 எம்டிபி முற்றிலும் நிதியமைச்சுக்கு சொந்தமானது” என்றார் கைருடின்.

தனது புகாருக்குப் பின்னே அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

பத்து கவான் தொகுதி அம்னோ உதவித் தலைவர் பதவியிலிருந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கைருடின் நீக்கப்பட்டார். அதற்கும் முன்னதாகவே அவர் 1 எம்டிபி குறித்து போலீசில் இரு புகார்களை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புறத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தினந்தோறும் நஜிப்புக்கும், 1 எம்டிபி நிறுவனத்திற்கும் எதிரான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28 ஏப்ரல் 2015) அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் முக்கிய உரை ஒன்றை தொலைக்காட்சியின் முதலாம் அலைவரிசையில் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையில் தன்மீது பெருகிவரும் எதிர்ப்புகள் – குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் சில விளக்கங்களை நஜிப் வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.