தஞ்சை, ஏப்ரல் 29 – 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6 மணிக்கு துவங்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதையொட்டி தஞ்சை கீழராஜ வீதியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
4 ராஜவீதிகளிலும் 4 தலைமை அதிகாரிகளின் ஆணையில் 200 போலீஸ் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர் நிற்கும் இடமான மேலவீதியில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் ராஜவீதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் இயக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தேரோட்டம் நடக்கும் 4 ராஜ வீதிகளில் மாவட்ட ஆட்சியாளர் சுப்பையன் ஆய்வு செய்தார்.
அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் போது கீழே விழாமல் இருக்க குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் மணல்களை கொட்டி சீரமைக்க வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் நிருபர்களிடம் கூறியதாவது: “உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்”.
“இதற்காக தேரோட்டம் நடக்கும் ராஜவீதிகளில் குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ராஜவீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது”.
“பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பின் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்”.