காத்மாண்டு, ஏப்ரல் 29 – நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 7.9 ஆக பதிவாகி இருந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா நாட்டில் இல்லை. அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியாவுக்கு அவர் சென்றிருந்தார். நாடு திரும்புகையில் பாங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற அங்கு சென்றார்.
பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய அவர் தனது டுவிட்டர் கணக்கை பார்த்தபோது அதில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் டுவீட் இருந்ததை அவர் பார்த்துள்ளார்.
அப்போது தான் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையே அவர் தெரிந்து கொண்டார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொய்ராலாவுடன் சென்றிருந்த பாண்டே மேலும் கூறுகையில், “மோடியின் டுவீட்டரை பார்த்துவிட்டு நாங்கள் நிலநடுக்கம் பற்றி மேலும் விவரம் கேட்டு அறிந்தோம். மேலும், செல்பேசியில் அவ்வப்போது தகவல்களை பெற்றோம். எனக்கும் மோடியின் டுவீட்டை பார்த்த பிறகே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது”.
“மோடியின் உதவிக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் மோடிஜியை மறக்கவே மாட்டோம். அவருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையே இல்லை என்றார்”.
மோடி தாய்லாந்தில் இருந்த கொய்ராலாவுக்கு செல்பேசியில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாள் கொய்ராலா நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.