ஜகார்தா, ஏப்ரல் 30 – பாலி நைன் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மயூரன் சுகுமாரன், தங்களிடம் கடைசியாகப் பேசிய இறுதி வார்த்தைகளை, அவரின் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தனது உறவினர்களிடம் மயூரன் கூறியதாவது:-
“வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.”
“வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. நான் ஆன்மீகவாதி இல்லை. ஆனால், நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியும்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்றொரு ஆஸ்திரேலியரான அண்ட்ரு சானுடன் சிறையில் இருந்த காலங்களில் நெருகிய நட்பு கொண்டிருந்த மயூரன், தங்கள் இறப்பு உறுதி செய்யப்பட்டபின், அது பற்றிய பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டாம் என முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர், தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்னர், இதயம் ஒன்றை வரைந்து அதில் தன்னுடன் தண்டனை அனுபவிக்கப் போகும் 8 பேரிடம் கையெழுத்தும் பெற்றுள்ளார்.
அதில் இறுதியாக மயூரன், “உலகை விட்டு நீங்கிய பின்பும் கடவுள் எங்களிடம் அன்பு செய்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.