மாஸ்கோ, ஏப்ரல் 30 – அனைத்துலக விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கடந்த செவ்வாய்கிழமை அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம் கட்டுப்பாட்டை இழந்ததால், பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனைத்துலக விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களையும், அதில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் 6 பேருக்கு தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு செல்ல ரஷ்யாவும், அமெரிக்காவும் சரக்கு விண்கலங்களை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் எம்27-எம் என்ற சரக்கு விண்கலம் கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துலக விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது.
அதில் 1940 பவுண்ட்(880 கிலோ) ரசாயன எரிபொருள், 110 பவுண்ட் ஆக்ஸிஜன், 926 பவுண்ட் எடையுள்ள தண்ணீர், 3,128 பவுண்ட் உதிரிபாகங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டன.
இந்த விண்கலம் அனைத்துலக விண்வெளி மையத்தை இன்று சென்றடைய வேண்டும். ஆனால் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அது கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சோயுஸ் விண்கலம் ஏவும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அதன்பின் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டானது. விண்கலத்தில் ஏற்பட்ட தவறை சரி செய்வதற்காக, விண்கலத்தின் பயண திட்டத்தை 6 மணி நேரத்துக்கு பதிலாக 2 நாட்களாக மாற்ற ரஷ்ய விண்வெளி மைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆனால், விண்கலத்தை மீண்டும் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் வெற்றிபெறவில்லை என ரஷ்ய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது குறித்து விண்கலத்தின் கட்டுபாட்டு மைய செய்தி தொடர்பாளர் கூறுகையி்ல்;-
‘‘விண்கலத்தின் விதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதுபோன்ற அவசர நிலையை சந்திப்பது இதுவே முதல் முறை. இது குறித்து நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம். சரக்கு விண்கலம் பூமி நோக்கி விழத் தொடங்கியுள்ளது. இது எப்போது பூமியில் விழும் என்று கணிப்பது கஷ்டம்’’ என்றார்.
இது குறித்து அமெரிக்காவின் நாசா மையம் கூறுகையில், ‘‘சர்வதேச விண்வெளி மையத்தின் அமெரிக்க பிரிவில், தற்போதைக்கு எந்த அவசர தேவையும் இல்லை. அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு அடுத்த நான்கு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்துலக விண்வெளி மையத்தில் இருக்கிறது”.
“அனைத்துலக விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற சரக்கு விண்கலம் ஜுன் 19-ஆம் தேதி செல்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.