சென்னை, ஏப்ரல் 30 – காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த விஜயகாந்த் அனைத்து கட்சி தலைவர்களையும் டெல்லி அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் பா.ம.க. கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விஜயகாந்த் கூறும் போது; “30 முறைக்கு மேல் பா.ம.க.வை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்”.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனியாக நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து பேசினார்.
அப்போது, ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது குறித்து உமாபாரதியிடம், அன்புமணி ராமதாஸ் விளக்கினார். அணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்”.
பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:– “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நான் கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி உமா பாரதியிடம் கோரிக்கை வைத்த போது, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்.”
“ஆனால், சுமார் 10 மாதங்கள் கடந்தும் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன். இந்நிலையில், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மதிக்காமல், மேகதாது பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகம் செய்து வரும் முயற்சியைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என உமா பாரதியிடம் கேட்டுக் கொண்டேன்”.
“மேலும், மேகதாது விவகாரம், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கைப் பாதிக்கும் அபாயகரமான பிரச்சனை என்பதை அவரிடம் விளக்கினேன். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்”.
“இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மூத்த வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நிலுவையில் உள்ள தமிழக அரசின் வழக்குகளில் தீர்வு கிடைக்க மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
“இது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. இதில் அரசியல் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் நாடகமாடி உள்ளார்”.
“தமிழக எதிர்க்கட்சித் தலைவராக மாநிலத்தில் தனது கடமையைச் சரிவர ஆற்றாத விஜயகாந்த், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்”.
“எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய விஜயகாந்த், அப்பொறுப்பின் மூலம் இதுவரை தமிழ்நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்களைப் பற்றி அவருக்கு உண்மையில் அக்கறையும் கிடையாது. சட்டப்பேரவைக்கு செல்வதும் இல்லை; பேசுவதும் இல்லை”.
“மகனின் திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறேன் என்றும் இரண்டு மாதமாக நாளிதழ்களைப் படிக்கவில்லை என்றும் கூறும் அவர் கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவதுமாக உள்ளார். பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக விஜய்காந்த் தரப்பில் இருந்து எனக்கு நேரடியாக எந்த அழைப்பும் முறைப்படி வரவில்லை”.
“விஜயகாந்த்தை நம்பி அவரது பின்னால் போகும் அளவுக்கு திமுகவின் நிலைமை இவ்வளவு மோசமாக தரம் தாழ்ந்து விட்டதே என எண்ணும் போது வருத்தமாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய உமாபாரதி;- “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.